அபுதாபிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) அபுதாபி செல்லவுள்ளார்.
கடந்த 2016 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்து சமுத்திர மாநாட்டின் தலைவராகப் பதவிவகித்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு, இம்முறை எதிர்வரும் 3 - 5 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்பாட்டுக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பையேற்று அபுதாபி செல்லவுள்ள முன்னாள் பிரதமர், எதிர்வரும் 5 ஆம் திகதியன்று மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
சுற்றுச்சூழல், பொருளாதாரம், பெருந்தொற்று' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் அதனை முன்னிறுத்தி ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இம்மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
'உலகளாவிய தொற்றுப்பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் நாடுகள் அனைத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடுகள் ஒருபுறம் வைரஸ் தொற்றினால் தமது பிரஜைகளை இழந்துகொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றன.
இத்தகைய இழப்புக்களிலிருந்து முழுமையாக மீள்வதற்குப் பலவருடங்கள் தேவைப்படும். ஒவ்வொரு தசாப்தத்திலும் இவ்வாறான சவால்கள் ஏற்படுமானால், அவற்றை நாடுகளும் அதன் பொருளாதாரமும் எவ்வாறு எதிர்கொள்ளும்? அவ்வாறு ஏற்படக்கூடிய சவால்களில் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்கள் விசேட அவதானத்திற்குரியவையாகும்.
உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் எரிபொருள் பயன்பாடு பூகோள வெப்பமயமாதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது' என்று 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி காலநிலை மாற்றத்தின் விளைவாக சிறிய தீவுகளும் சமுத்திரப்பிராந்திய நாடுகளும் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஏற்பாட்டுக்குழு, மறுபுறம் மீன்பிடி முறைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சவாலுக்குட்படுத்தியிருப்பதாகவும் இவைதொடர்பில் ஆராயப்படவேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்து சமுத்திர மாநாட்டில் நிலைபேறான கடல்சார் வளங்களின் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தினால் சிறிய தீவுகள் மற்றும் கடற்பிராந்திய நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்கள், இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தைக் குறைத்தல், நிறைபேறான எதிர்காலத்தை உறுதிசெய்யும் நோக்கில் பசுமை உற்பத்தியை ஊக்குவித்தல், கடற்சூழல் மாசடைவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்சார் விடயங்கள் தொடர்பிலும் கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான பொருளாதார மீட்சி, இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வர்த்தகப்பாதைகளை உருவாக்குவதன் அவசியம்.
இந்து சமுத்திர சக்திவலு பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பிலும் கொரோனா தொற்றினால் உலகநாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், சுகாதாரத்துறையில் காணப்படும் குறைபாடுகள், சமூக - பொருளாதார தாக்கங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றுக்கு முகங்கொடுப்பதில் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பெருந்தொற்றுப்பரவல் குறித்த விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.