தடைகளை தாண்டி சாதனை படைத்த ரணில்; வாக்களித்துவிட்டு வைத்தியசாலை திரும்பிய எம்.பிக்கள்!
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
ரணிலுடன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், பதவி காலம் முடிவடைய இன்னும் இரண்டரை வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஜுலை 14 ஆம் திகதி அவர் பதவி விலகினார்.
மக்கள் போராட்டத்தை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனால் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் பொறுப்பு, நாடாளுமன்றம் வசமானது. இதன்படி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் ஜுலை 19 ஆம் திகதி (நேற்று) ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்வாங்கியதுடன் தமது கட்சி - கூட்டணியின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு என அறிவிப்பு விடுத்தார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. நாடாளுமன்ற செயலாளரே இன்று தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டார்.
வாக்களிப்பு நடைமுறைகளை அவர் விவரித்தார். அதன்பின்னர் முற்பகல் 10.24 மணியளவில் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது. 11.45 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. அதன்பின்னர் வாக்கெண்ணும் பணி இடம்பெற்றது. நண்பகல் 12.40 மணியளவில் தேர்தல் முடிவை தெரிவத்தாட்சி அலுவலராக , நாடாளுமன்ற செயலாளர் சபைக்கு அறிவித்தார். இதற்கமைய 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
வாக்கெடுப்பு தினத்தில் சபைக்கு கட்டாயம் வருமாறு தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்சிகள் பணிப்புரை விடுத்திருந்தன. இதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த எம்.பிக்கள்கூட அழைத்துவரப்பட்டிருந்தனர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு எம்.பிக்கள், சபைக்கு வந்து, வாக்களித்து திரும்பிச்சென்றனர். இதில் சமன்பிரிய ஹேரரத் எம்.பி. 'சேலைன்' போத்தலுடன் சபைக்கு வந்திருந்த நிலையில் வாக்களித்தகையோடு அவர் மீண்டும் வைத்தியசாலை சென்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, சுயாதீன அணிகள், மொட்டு கட்சியின் ஒரு பிரிவு தமது ஆதரவை டலஸ் அழகப்பெருமவுக்கு நேற்று வெளிப்படுத்தியிருந்தன. அதேசமயம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன ரணிலுக்கு ஆதரவளிக்கபோவதாக அறிவித்திருந்தன.
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளாக இதுவரை பதவி வகித்தவர்கள் விபரம்;-
1. ஜே.ஆர். ஜயவர்தன
2. ரணசிங்க பிரேமதாச
3. டி.பி. விஜேதுங்க
4. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
5. மஹிந்த ராஜபக்ச
6. மைத்திரிபால சிறிசேன.
7.கோட்டாபய ராஜபக்ச.
8. ரணில் விக்கிரமசிங்க
இலங்கை அரசியல் வரலாற்றில் 1993 இல் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றம் வசமானது. பதில் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
அதுமட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.