ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் செக் வைத்த மொட்டுக் கட்சி எம்.பிக்கள்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்னர் தமது அணிக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்றால், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
இந்தவகையில், நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டில் சமீபத்தில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்துவதில் பலனில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுப்படுத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.