ரணில்-ஹரிணி விவகாரம் ; சிசிடிவியை ஆராய கோருகிறது சிஐடி
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்த விசாரணையில், தேவைப்பட்டால் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்க முடியும் என்று மாளிகாகந்த நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.
பிரதமர் அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து விசாரணைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதவானிடம் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்பாக தேசிய மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறு சிஐடி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், தேவைப்பட்டால் தேசிய மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்க முடியும் என்று நீதிவான் சிஐடியினரிடம் தெரிவித்தார்.