உள்ளூராட்சி சபைகள் கையை விட்டு போகும் பயத்தில் ரணில்!
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை தற்போது நடத்தினால் ராஜபக்ஷ நிர்வாகத்துடன் தொடர்புடைய உள்ளூராட்சி சபைகள் கையை விட்டு செல்லும் என்பது தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) நன்கு தெரியும் எனவும் எனவே அவர்களை பாதுகாத்து வைத்து கொள்வதற்காக தேர்தலை பிற்போட முயற்சி செய்கின்றனர் என்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கேமன் குமார தெரிவித்துள்ளார்.
இதனால் தேர்தலை நடத்த போதிய பணம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது எனவும் இது முற்றிலும் போய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போதே கேமன் குமார இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு நிதி ஒதுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் இருந்து அரசாங்கம் பின் வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆட்சிக்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும் ஆட்சியாளர்கள் விரும்பும் வகையில் தேர்தலை பிற்போட வாய்ப்பில்லை என்றும் கேமன் குமார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மக்களுக்கு தற்காலிக தீர்வுகளை வழங்கி இவ்வாறே தொடர்ந்தும் நாட்டை நடத்த முயற்சி செய்வார்களாயின் மக்கள் அமைதி காக்க போவதில்லை என்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கேமன் குமார தெரிவித்துள்ளார்.