ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு...நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்பிக்கள்
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பினர். கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை. அதனால் பெற்றோலியம் , டீசல், சமையல் எரிவாயு வாங்க முடியாது. மின் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நாட்களாக மின்வெட்டு அமலில் உள்ளது. உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறு கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவரது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடந்து வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல இடங்களில் வீதிப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ள ரம்புக்கனை பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
போராட்டக்காரர்களில் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவியது. நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.