மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டார் ராஜித சேனாரத்ன; விளக்கமறியல் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் 'பிரகடனம்' வெளியிட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிடியாணை
இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனுவை விசாரிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்மானித்தது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.