சர்ச்சை நியமனம்; வாய் திறக்காத ராஜபக்ஷக்கள்
வடமாகாண வடமாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சமன் பந்துசேன கடந்த திங்களன்றுபதவியேற்று செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் 95சதவீதமானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருக்கையிலும், 14 தமிழ் அதிகாரிகள் குறித்த பதவிக்கு பொருத்தமானவர்களாக இருக்கையிலும் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஒன்றுகூடி ஆராய்ந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை கடந்த திங்கட் கிழமை எழுதியிருந்தனர்.
அதேபோன்று கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனும் இவ்விடயம் உட்பட யாழ்.மாவட்ட செயலாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்படவிருப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி அவ்விதமான நியமனத்தினைச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுத்தியிருந்தார்.
எனினும், தற்போது வரையில் ஜனாதிபதி கோட்டாபயவிடத்திலிருந்தோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலிருந்தோ குறித்த கடிதங்கள் தொடர்பாக எவ்விதமான பதில்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என சி.வி.கே.சிவஞானம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை முன்னதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணி நியமனம் உட்பட இரு விடயதானங்கள் தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரு கடிதங்களில் ஒன்றுக்கு மட்டும் பதிலளிக்கப்பட்ட போதும் அந்தப்பதிலில் தனக்கு திருப்தி இல்லை என சம்பந்தன் அனுப்பிய மீள் கடிதத்திற்கு இதுவரையில் எந்தவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.