ராஜபக்ச அரசாங்கத்தின் பகற்கொள்ளை! அம்பலமான தகவல்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு முறைப்படி உரிய பணமாற்று விகிதத்தினைக் கொடுக்காது, இலங்கை மத்திய வங்கி மூலம் அரசாங்கம், புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசு புலம்பெயர்ந்த சமூகத்தினை மிக மோசமாகச் சுரண்டுகின்றதாகவும் குற்றம்ம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் இவ் நடைமுறையினை உடனே நிறுத்துமாறு இலங்கை ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு (INSD) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு என்பது கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் மனித உரிமைகளுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பாகும்.
குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளாந்தம் நடைமுறைக்கு வரும் திறந்த நாணயச் சந்தை வீதத்தை விட ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 50 இலங்கை ரூபாயினைக் குறைத்தே வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இலங்கை மத்திய வங்கி மூலம் நாட்டில் வங்கிகளுக்குக் கட்டளையிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையில் உள்ள தனது உறவினருக்கு வெளிநாட்டு வங்கி ஒன்றின் மூலம் ஆயிரம் டொலர்களை அனுப்பும் போது இலங்கையில் பெற்றுக்கொள்பவர் 50,000 ரூபாய்கள் குறைவாகவே பெற்றுக்கொள்வார்.
இது மிக மோசமான அப்பட்டமான பகற் கொள்ளைக்கு ஒப்பானது எனவும் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மோசடி, ஊழல், அபரிமிதமான அரச செலவு, வீணான பாதுகாப்புச் செலவினங்கள் போன்றவற்றால் வங்குரோத்து நிலைக்கு வந்திருக்கும் அரசாங்கம் இவ்வகைச் சுரண்டலின் மூலம் தமது கடன்களை ஈடுசெய்ய முயற்சிக்கின்றதாகவும், இது அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தப் போலியான நாணய மாற்று விகிதத்தின் விளைவாக, இலங்கையின் புலம்பெயர்ந்த உழைக்கும் சமூகம் வெளிநாடுகளில் தமது உழைப்பின் பெரும்பகுதியினை அந்தந்த நாடுகளில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குச் செலவு செய்தபின், தம் நலன்களை ஒறுத்துச் சேமித்தனுப்பும் பணத்தில் மிகப் பெரிய இழப்பினைச் சந்திக்கின்றனர்.
இந்த நிலையில், புலம்பெயர்ந்த சமூகம் தாம் அனுப்ப விரும்பும் பணத்திற்கு அதிகபட்ட விகிதம் கிடைக்கவேண்டும் என்பதால், உண்டியல் போன்ற அதிகாரபூர்வமற்ற பணப்பரிவர்த்தனை முறைகளை நாட வேண்டியுள்ளது. எனினும் தனது பணத்திற்கு கிடைக்கப்பெறும் அதிகபட்ச மாற்று விகிதத்தினைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை என இலங்கையின் ஜனநாயகத்திற்கான சர்வதேச வலையமைப்பு வலியுறுத்திக் கூறுகிறது.
இதுபோன்ற முறைசாரா முறைகளில் பணம் அனுப்புவதைத் தடை செய்வதாகவும், அத்தகைய முறைகள் மூலம் பணத்தைப் பெறுபவர்கள் மற்றும் மாற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களது வங்கிக் கணக்குகள் தடைசெய்யப்படும் எனவும் 2021 டிசம்பர் 4 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது ராஜபக்ச குடும்ப ஆட்சியின் ஜனநாயக விரோத மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளின் மற்றொரு வன்முறை வளர்ச்சி எனவும் கூறப்படுகின்றது. மக்களைக் கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு ஆளாக்கி வரும் ராஜபக்சக்கள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கை சமூகத்தையும் பலவழிகளில் அச்சுறுத்தி வருகின்றனர்.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு போலி-வெளிநாட்டு மாற்று விகிதத்தால் அல்ல, உண்மையான சந்தை விகிதத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மறைத்து இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகள் மூலம் புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து பல பில்லியன் ரூபாய்களை ராஜபக்சக்கள் பறிக்க கணக்கிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த அப்பட்டமான மோசமான சுரண்டலுக்கு எதிராகவும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் விரும்பியபடி தம் உறவுகளுக்கு பணம் அனுப்பும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கச் செயற்படுமாறும் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஜனநாயகத்திற்கான இலங்கையின் சர்வதேச வலையமைப்பு கேட்டுக்கொள்கிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.