நாட்டின் பல பகுதிகளில் நாளையும் மழை தொடரும்
நாட்டின் பல பகுதிகளில் நாளையும் (11) மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான சேதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.