டெல்லியில் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி ; நேரில் சென்று ஆறுதல் கூறிய ராகுல்
டெல்லியில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக கூறப்படும் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி டெல்லி காண்ட் பகுதியை அடுத்த பழைய நங்களில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற 9 வயது தலித் சிறுமி, கோயில் பூசாரி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பலால் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அத்துடன் பொலிஸாருக்கு தெரிவிக்காமல் தடயங்களை அழிக்கும் விதமாக குடும்பத்தினரை மிரட்டி அவசர அவசரமாக சிறுமியின் சடலத்தையும் எரித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமிக்கு நீதி கோரி பீம் மார்மி அமைப்பினர் வீதி மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை, தடயங்களை அழித்தல், போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,
தலித் சிறுமியும் நாட்டின் மகள்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசினேன். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும், வேறு எதுவும் தேவையில்லை. குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிபட கூறியுள்ளார்.
இதேவேளை சிறுமி சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி தென்மேற்கு பகுதி பொலிஸ் துணை ஆணையர் 48 மணி நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மனு அனுப்பியுள்ளது.
மேலும் டெல்லியில் 9 வயது சிறுமி , கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அவமானம் என்றும் டெல்லியின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதுடன் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.