ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது.. தவெக கடும் கண்டனம்
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் உரிமைகள் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நாட்டில் ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு வருவதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களையும் அவர்களுக்குத் துணையாக நிற்பவர்களையும் ஒடுக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொள்ளும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளது. நீட் தேர்வு போராட்ட விவகாரத்தில் இத்தனை நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தபோதும் தவெக மௌனம் காத்து வந்தது.
இந் நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.