பிரச்சனைக்குள் மாட்டிவிட்ட கேள்வி! மனம் உடைந்த எம்.பி விக்கி!
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவேன் என்றே நான் கூறினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. vigneswaran) தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (15-05-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) அமைச்சரவையில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன் என பல விமர்சனங்கள் என் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அதை தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
ஊடகங்களில் என்னைப் பற்றிய சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக் கொண்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், நாடாளுமன்றத்தில் இருக்கும் அதிகூடிய அனுபவம் மிகுந்த அறிவுமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் ரணில் விக்கிரமசிங்க.
ஆகவே தற்போது இருக்கும் நாட்டின் மிகச் சிக்கலான பொருளாதார நிலையில் அதிலிருந்து எம்மை மீட்டு நாட்டை எப்படி கொண்டு செல்லலாம் என்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தலைமைகள் இருப்பவர் அவர்தான் என்ற கருத்தை நான் முன்வைத்தேன்.
அதற்கான காரணம் அவருக்கு பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும் முன்னர் நடைபெற்ற பிரச்சனைகளில் இருந்து நாட்டை மீட்டதால் அது சம்பந்தமான போதிய அறிவுள்ளது.
எனவே அதை வைத்து அவர் இந்த பதவிக்கு சரியானவர் என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு பின் எழுப்பிய கேள்வி தான் என்னை பிரச்சனைக்குள் மாட்டிவிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்ற நேரிட்டால் அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? இதுவரையில் யாரும் அதாவது ரணில் விக்கிரமசிங்கவும் என்னை கேட்கவில்லை.
இதற்கான பதிலாக நான்கூறுவது. தமிழ் தேசிய கட்சிகள் பெரும்பாலும் தேசிய அரசுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவது இல்லை. ஏனென்றால் எங்களின் தேவைகள் வேறு, தேசிய கட்சிகளின் தேவை வேறு. ஆகவே நிபந்தனைகளுடன் ஆதரவை வழங்குவது அல்லது அது தொடர்பில் பரிசீலினை செய்வது என்று நான் கூறியிருந்தேன்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை இல்லாது செய்தல், இராணுவத்தின் வெளியேற்றம், இவ்வாறு பல நிபந்தனைகளுக்கு அவர் சம்மதம் தெரிவித்தால் அமைச்சரவையில் இருப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்று கூறியிருந்தேன்.
ஆனால் நான் பதவி ஆசை பிடித்தது என்பது போல பலர் கருத்துக்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. எமது நிபந்தனை தொடர்பில் யாரும் வெளிப்படுத்தவில்லை என்றார்.