போர்வையை வைத்தாவது உடம்பை மூடிக்கொள்ள வேண்டும்; தலிபான்கள் கடும் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெண்கள் பொதுஇடங்களுக்கு தனியாக செல்லக்கூடாது, பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் செல்வதில் கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் செயல்படுத்தியுள்ளதுடன், பெண்கள் ஹிஜாப், பர்தா அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் அரசு பணிகளில் பெரும்பாலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கும் ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பணியில் உள்ள பெண்கள் தங்கள் உடம்பை போர்வை வைத்தாவது மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால் பெண்கள் தங்கள் பணியை இழக்க நேரிடும் எனவும் தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.
அரசு பணியில் ஈடுபடுபடும் அலுவலகத்தில் பெண்கள் தங்கள் உடம்பை முழுமையாக மூடிக்கொள்ளும் புர்காவை அணிய வேண்டுமா? என்று தலீபான் செய்தித்தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தலீபான் செய்தித்தொடர்பாளர்,
பெண்கள் எந்த விதமான ஹிஜாப்பையும் அணிந்துகொள்ளலாம். அது அவர்களின் விருப்பம். ஆனால், அது அவர்களின் உடம்பை சரியாக மறைத்திருக்க வேண்டும். அதற்காக அவர்கள் போர்வையை அணிந்துகொண்டாலும் சரி’ என கூறியுள்ளார்.