புத்தளத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்!
புத்தளத்தில் டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வரும் நிலை வந்த நிலையில், தற்போது பெற்றோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
இலங்கையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதற்கு பின்னர் பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு என்பனவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், புத்தளம், முந்தல், கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒருவாரமாக டீசலுக்கும், பெற்றோலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ” டீசல் இல்லை” , “பெற்றோல் இல்லை” என்கின்ற பதாதைகள் தொங்க விடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு வெறிச்சோடி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
புத்தளம், முந்தல் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களில் மட்டும் டீசல் விநியோகிக்கப்படுவதுடன், புத்தளம் நகரில் மாத்திரம் ஒக்சன் 95 சுப்பர் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பெற்றோல் மூலம் இயங்குகின்ற வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று பெற்றோல் கொள்வனவு செய்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.