மீண்டும் ஆரம்பமாகும் புத்தளம் - கொழும்பு ரயில் சேவைகள்!
புத்தளம் - கொழும்பு பயணிகள் ரயில் போக்குவரத்து சேவைகள் எட்டு நாட்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் - கொழும்பு ரயில் மார்க்கத்தின் பத்துளு ஓயா பிரதேசம் வெள்ளத்தினால் மூழ்கியதன் காரணமாக கொழும்பு - புத்தளம் வரையிலான ரயில் சேவைகள் கடந்த (04.11.2023) ஆம் திகதி முதல் பங்கதெனிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
பத்துளு ஓயா ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளம் அதனை அண்டிய ரயில் தண்டவாளம் பிரதான வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் காணப்பட்டது.
ரயில்வே திணைக்கள ரயில் பாதையை சுத்தப்படுத்தும் ஊழியர்களால் தண்டவாளத்தில் காணப்பட்ட வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் ஆரம்பமாகும் ரயில் சேவைகள்
இந்த நிலையில் நாளை (13.11.2023) முதல் புத்தளம் ரயில் நிலையம் முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையிலான அனைத்து ரயில் சேவைகளும் வழமை போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை நாளாந்தம் நான்கு தடவைகள் ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
புத்தளத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கும், காலை 7.40 மற்றும் 11.55 மாலை 5.10 மணியளவில் குறித்த ரயில் சேவைகள் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்கின்றன.
இந்த நிலையில் திடீரென ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டமையால் நாளாந்தம் ரயிலில் போக்குவரத்து செய்யும் புத்தளம் , பாலாவி, மதுரங்குளி மற்றும் முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கி வந்துள்ளனர்.