எல்லைமீறும் ஆசிரியர்களின் கண்டிப்பு ; 8வயது மாணவி தாக்கிய ஆசிரியர்
திருகோணமலையில் ஆசிரியர் ஒருவரினால் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் 8வயது மாணவி ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பலமுறை ஆசிரியரினால் தாக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து குறித்த தாக்குதலுக்கு நீதி கோரியும், வேறு எந்த மாணவிக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற வகையிலும் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கினால் நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற நேரங்களிலும் தன்னிடம் வந்து முறையிட முடியும் என திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ஒருவர் இதுபோன்ற ஒரு சம்பவத்தின்போது தெரிவித்திருந்தமையை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
நான் உட்பட எவருக்கும் ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது மாறாக அவர்கள் தங்கள் எல்லையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதேயாகும். குறித்த சம்பவத்தை நான் ஆராய்ந்த வகையில் ஆசிரியரின் பக்கமே தவறு உள்ளதாக உணர்கின்றேன்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள்.
அந்தவகையில் பெறுபேற்றிலும் சரி, ஒழுக்கத்திலும்சரி சரியான அடைவு மட்டத்தை எட்ட வைத்திருக்க வேண்டியது பாடசாலை என்ற நிறுவனத்தின் பாரிய பொறுப்பாகும். முட்டாள் என்று எந்த பிள்ளையும் கிடையாது.
ஒரு பிள்ளையின் திறமைகளை அடிப்பதன் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்றால் அதற்கு உடையாத நல்ல பிரம்பும் அடிக்கத் தெரிந்தவர்களும் போதும். ஆசிரியர்கள் தேவையில்லை.
ஒரு பிள்ளையின் திறமைகளை எவ்வாறு வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற நுட்பம் ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். ஆசிரியர் பிரம்பைக் காட்டி மிரட்ட வேண்டுமே தவிர அடிப்பதை இறுதியான தெரிவாக வைத்திருக்க வேண்டும்.
பிள்ளைகளின் சுட்டித்தனத்தை உடல்ரீதியாகவும், உள ரீதியாகவும் கையாளத் தெரியாதவர்கள் எவ்வாறு ஆசிரியர்களாக இருக்க முடியும்? குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதில் எவ்வித தவறும் இல்லை.
ஆனால் அதன் எல்லையை அவர்கள் நன்கு அறிந்து செயற்பட வேண்டும். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்தால், பல முறை குறித்த மாணவி தண்டிக்கப்பட்டிருக்கின்றார்.
மாணவி தொடர்பாக ஆசிரியர் ஏன் பெற்றோருடன் கலந்தாலோசிக்கவில்லை? அடிப்பதால் எதையும் சீர்செய்து விடலாமா? இல்லைதானே, குறித்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகத்துக்குள் தீர்த்திருக்க வேண்டும்.
எனினும் இதில் இரு தரப்பும் தவறிவிட்டது. ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருந்திருந்தால் ஆசிரியரை சிறையில் அடைத்திருக்கலாம் அத்துடன் நீதிமன்றத்திற்குகூட போய் இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
இருப்பினும் அவர்கள் அந்த பிள்ளையின் பெற்றோர் அவர்களுடைய மன நிலையினையும் பாடசாலை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எட்டு வயதான சின்னப் பிள்ளை காலிலும், கையிலும் அடி வாங்கிய சிவந்த, தடித்த அடையாளங்களுடன் வீட்டுக்கு வரும்போது பெற்றோரின் மனம் என்ன பாடு படும் என்பதை பெற்றோராக இருந்து பார்த்தால்தான் உணர்ந்து கொள்ள முடியும்.
எனவே ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கான உளவியலைக் கற்றுக் கொண்டும் கண்டிப்பின் எல்லையை உணர்ந்து கொண்டும் அவர்களுக்கான தமது உயரிய பணியை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.