வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகள்; 75 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நேற்றையதினம் வெளியாகியிருந்தன. நாடளாவிய ரீதியில் பாடசாலை ஊடாக மற்றும் தனிப்பட்ட ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 6 இலட்சத்து 22,351 பரீட்சாத்திகளில் 2 இலட்சத்து 36,053 பேர் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் பரீட்சார்த்திகளில் 75 சதவீதமானோர் (நுண்கலைப்பிரிவு மாணவர்கள் தவிர) உயர்தரம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கமைய திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசித்து பரீட்சை சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஆவணத்தை எந்தவொரு இடத்தில் உபயோகிக் முடியும். பணம் செலுத்தி இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது. உயர் தரத்திற்காக வேறு பாடசாலைகளுக்கு செல்பவர்களும் , வேறு பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்களும் இதனை உபயோகிக்க முடியும்.
அத்தோடு பரீட்சை பெறுபேறுகளை தெரிந்து கொள்ளும் போது, பரீட்சை சுட்டெண் நினைவில் இல்லை என்றால் , பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசித்து தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி பெறுபேற்றினை அறிந்து கொள்ள முடியும்.
அவ்வாறில்லை எனில் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முழுப்பெயரை குறிப்பிட்டு பெறுபேற்றை அறிந்து கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார் .
மேலும் இவை தவிர சகல பாடசாலை அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இணையவழியூடாக பெறுபேற்று ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.