எரிபொருள் QR குறியீடுகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையைப் போன்று போலியாகச் செயற்பட்டு, பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைத் திருடி வந்த ஆறு இணையதளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வாகனப் பதிவு விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, சட்டவிரோதமான முறையில் கியூ.ஆர். குறியீடுகளைப் பெறுவதற்காக இந்தத் தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தகவல்கள் திருட்டு
இது குறித்து இலங்கை கணினி அவச தயார்நிலை குழுவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மோசடி இணையதளங்களுக்கான இணைப்புகள் வட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் ஊடாகப் பெருமளவில் பகிரப்பட்டுள்ளன.
பல போலித் தளங்கள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியை ஒத்த பெயர்களிலேயே இயங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் இவை உண்மையான தளங்கள் என நம்பி ஏமாந்துள்ளனர்.
தமிழர் பகுதியில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்
இவ்வாறான போலித் தளங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தவுடன், அவை உடனடியாக முடக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்தத் தளங்கள் ஊடாக எவ்வளவு தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய இணையதளங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் ஊடாக வரும் கியூ.ஆர். குறியீடு தொடர்பான தகவல்களைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது அவற்றில் விபரங்களை வழங்கவோ வேண்டாமென இலங்கை கணினி அவச தயார்நிலை குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.