இந்தியா–இலங்கை கப்பல் சேவையில் மக்கள் ஆதரவு அதிகரிப்பு
இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17000 பேர் வரையிலானோர் இருநாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இலங்கை - இந்திய பயணிகள் படகு சேவை தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பயணிகள் படகுச் சேவையானது 2023 ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன.
எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தியா அதற்காக உதவ தயாராக இருக்கின்றது. இதேவேளை படகுச் சேவை மூலம் இந்த வருடத்தில் 17 000பேர் வரையிலான பயணிகள் வந்து போயுள்ளனர்.
153 சேவைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு படகுகள் மூலம் சேவைகள் இடம்பெறுகின்றன.
தொடர்ச்சியாக சேவைகள் இடம்பெறுவதுடன், கடல் சீற்றம் காலத்தில் நிறுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தவிர மற்றைய நாட்களில் சேவைகள் இடம்பெறுகின்றன என்றார்.