உளவியல் தண்டனைகள் குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்கு பாதிப்பு
உடல் , உளவியல் ரீதியான தண்டனைகள் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது.
சர்வதேச சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் பிரீத்தி இனோகா ரணசிங்க, உடல் ரீதியான தண்டனைகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஆய்வுகள் தெளிவாக நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் ரீதியான தண்டனைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவை
வீடுகளிலும் பாடசாலைகளிலும் இத்தகைய நடைமுறைகள் நீண்ட காலமாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் கீழ் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990 முதல் இலங்கையும் இந்த உடன்படிக்கையில் ஒரு தரப்பினராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரை கொடூரமான மற்றும் இழிவான நடத்தைகளிலிருந்து பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும், தண்டனைச் சட்டக் கோவையின் 308 (A) பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் போன்றவை உடல் மற்றும் உளவியல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்வதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
உடல் ரீதியான தண்டனைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவை என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், உடல் ரீதியான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் இரண்டாவது அதிகபட்சமாகப் பதிவுசெய்யப்படும் பிரிவாக இருப்பதோடு, ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 2,500 வரையிலான சம்பவங்கள் பதிவாகின்றன எனவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.