கிண்ணியா பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு கோரி பாரிய போராட்டம்
திருகோணமலை கிண்ணியா கல்வி வலய பிரிவுக்குட்பட்ட அல் அதான் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை இடமாற்றுமாறு கோரி, இன்று (09) காலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், அதிபரின் நிர்வாக நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறி கோஷங்களை எழுப்பினர்.

அதிபரின் நிர்வாகத் திறமையின்மை
அதிபரின் நிர்வாகத் திறமையின்மை, பாடசாலை அபிவிருத்தியில் நிலவும் பின்னடைவு, மாணவர்களின் கல்விச் சூழல் மற்றும் பௌதிக சூழல் பாதிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டம் காரணமாக பாடசாலையின் வழமையான கல்விச் செயற்பாடுகள் இன்று முற்றாகப் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்த போதிலும், மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் செல்லவில்லை.

இதனால் பாடசாலை வளாகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த கிண்ணியா பொலிஸார்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
