வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
வடமாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில் தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் நியமனத்தில் உள்வாங்கப்படாத வட மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்களும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் என்றும், மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ள நிலையில் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வட மாகாண புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.