முல்லைத்தீவு அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி போராட்டம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு முறைகேடு
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,
நிர்வாக சீர்கேடுகள், நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்வதாகவும் தெரிவித்து, அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து பாடசாலை நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் 14 ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்தமை, அதிபரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக பாடசாலையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
குறித்த அதிபர் பாடசாலையை பொறுப்பேற்கும்போது 83 ஆசிரியர்கள் இருந்ததாகவும் தற்போது 63 ஆசிரியர்களே காணப்படும் நிலையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்
இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து, பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும் பாதுகாப்பின்றியும் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படைத் தன்மை இன்றி அதிபர் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை, அதிபர் மீதான நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் இல்லை. பல பாடவேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை போன்ற காரணங்களின் அடிப்படையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலய கல்வி பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் - தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றுக்கு நேரிலும் தொலைபேசியிலும் கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இந்த அதிபர் வலயத்துடன் இணைத்தே விசாரணை செய்யப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ்விசாரணையை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுகிறோம் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, போராட்ட இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன் பிரதிகள் வட மாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுநர் செயலகம், ஆளுநர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.