யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்
யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மத்திய பேருந்து வளாகத்தினுள் பொது மலசல கூடம் அமைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டு , அதற்கு அமைவாக அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு , பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

பணிகளுக்கு இடையூறு
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மலசல கூட்டத்திற்கான நீர் குழாய்களை பொருத்தும் பணிகளுக்காக மாநகர சபை ஊழியர்கள் சென்ற வேளை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தடுத்துள்ளனர் அத்துடன் மாநகர சபை பொது மலசல கூடத்தை நிர்வகித்தால், அதற்கு எதிராக நாம் எமது போக்குவரத்து சேவையை முடக்கி போராடுவோம் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுமானம் நடைபெறும் போதே , மலசல கூடத்தை மாநகர சபை தான் நிர்வாகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் , அதற்கு எதிர்ப்புக்களோ , அது தொடர்பில் பேச்சுக்களையோ போக்குவரத்து சபையினர் நடத்தவில்லை.
இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். தொடர்ந்து இடையூறு விளைவித்தால் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என மாநகர சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.