தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
எரிபொருள் நிவாரணம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இன்றைய தினம் சாதகமான தீர்மானத்தை வழங்காவிடின் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.
பழைய விலைக்கு டீசல் வழங்க வேண்டும் அல்லது பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை தற்போது எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினால் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளோம். இலங்கை ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு போட்டித்தன்மையாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை நியாயமற்ற வகையில் அதிகரித்துள்ளது.
டீசலின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, பழைய விலையை காட்டிலும் தற்போது டீசலின் விலை 45 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கமைய எரிபொருளை கொள்வனவு செய்து குறைந்த பேரூந்து கட்டணத்திற்கமைய தனியார் பேரூந்து சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது.
எரிபொருள் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு தனியார் பேருந்து சேவைக்கு பழைய விலைக்கு டீசல் வழங்க வேண்டும் அல்லது பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்பதை போக்குவரத்து அமைச்சிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை சடுதியாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் கடுமையான தீர்மானங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய எரிபொருள் நிவாரணம் வழங்குவது குறித்து போக்குவரத்து அமைச்சு இன்றைய தினம் சாதகமான தீர்மானத்தை வழங்காவிடின் நாளை முதல் தனியார் பேரூந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்றார்.