சிறைச்சாலையிலிருந்து தொலைபேசியில் மிரட்டிய கைதிகள்
சிறையில் உள்ள கைதிகள் சிலர், வெளி நபர்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணை நடத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான இன்று (27) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தங்களுக்குச் சிறைக் கைதிகள் குழுவொன்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுப்பதாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த அநாமதேய முறைப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை மன்றுக்கு அறிவிக்க அனுமதி கோரி, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு செய்த விண்ணப்பத்தைச் பரிசீலித்த நீதவான், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சம்பவம் குறித்து மன்றுக்குத் தெரிவித்த விசாரணை அதிகாரிகள், இந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் எந்தச் சிறைச்சாலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவை வழங்குமாறும் விசாரணை அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கும் நீதவான் அனுமதி வழங்கினார்.