மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள கைதி!
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மரபணு மாதிரிகளை பரிசோதித்த போதே ஒருவருக்கு மூளைக்காய்ச்சால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
4 நோயாளிகளின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது கைதி ஒருவருக்கு மட்டும் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 17 கைதிகள் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இவர்கள் அனைவரின் மரபணு மாதிரிகளும் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாத்தறை சிறைச்சாலையை சுற்றியுள்ள மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.