அதிபர்கள்- ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை இன்றைய தினம் கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று அறிவித்திருந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது கடமைகளுக்கு இன்றைய தினம் சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொது சேவை, உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் அடிப்படையில், அனைத்து அரச ஊழியர்களும் இன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டும்.
இதன்படி, அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், கல்வி வலய அலுவலகங்களின் அதிகாரிகள், கல்வி சார் ஊழியர்களை இன்று கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு நேற்று மாலை அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என கல்வி சார் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதோடு தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.