மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா ரணில்
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதை முன்னிறுத்தி தமது கடமைகளை ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் உரியவாறு நிறைவேற்றி வருகின்றனர் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அவ்வாறிருக்கையில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்குப் பிறிதொரு நபரின் பெயரைப் பரிந்துரை செய்வதற்குப் பிரதமர் தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நாம் கடும் அதிருப்தியடைவதாக மத்திய வங்கியின் நிறைவேற்று அலுவலர்கள் சங்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தினால் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ;
சுதந்திரமடைந்ததன் பின்னர் நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீங்கள் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்குப் பிறிதொரு நபரின் பெயரைப் பரிந்துரை செய்வதற்குத் தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நாம் கடும் அதிருப்தியடைகின்றோம்.
கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதையும் முன்னிறுத்தி குறுகிய மற்றும் நீண்டகால பொருளாதார மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அன்றாடத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நிதியைத் திரட்டுதல் உள்ளடங்கலாகப் பெருமளவான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில் மத்திய வங்கியில் உயர்மட்ட அதிகாரியாக நீண்டகாலம் சேவையாற்றியதுடன் சர்வதேச நாணய நிதியத்திலும் நிறைவேற்றுப்பணிப்பாளர் பதவியை வகித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றிவருகின்றனர் என்பதே எமது அபிப்பிராயமாகும்.
நாடொன்றில் அரசாங்கம் மாறினாலும் ஸ்திரமான தேசிய கொள்கை மற்றும் செயற்திட்டம் என்ற காணப்படவேண்டியதன் அவசியம் குறித்து முன்னரைவிடவும் பரவலாகப் பேசப்பட்டுவரும் தற்போதைய சூழ்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவி உறுதியான நிலையில் பேணப்படவேண்டியது அவசியமாகின்றது.
பொருளாதார நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கிய பதவியாக இருக்கக்கூடிய மத்திய வங்கி ஆளுநருக்கு மத்திய வங்கியின் இலக்கை அடைந்துகொள்வதற்குப் போதுமான கால அவகாசத்தை வழங்கவேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கி தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்.
அதேவேளை நாட்டின் எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையில் அரசியல் நியமனங்கள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடத்தயாராக இருக்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.