டீசல் விலையை குறைத்தால் மாத்திரமே பொதுமக்களுக்கு விடிவுக்கலாம்!
பெற்றோல் விலை குறைப்பினால், பொதுமக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது என அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஏனைய சில சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, டீசல் விலையைக் குறைத்தால் மாத்திரமே பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும் என அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 40 ரூபாவால் கனியவள கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாவாகும். அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலை திருத்தப்படவில்லை என கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது, கனியவள கூட்டுத்தாபனத்தின் விலைக்கு அமைய லங்கா ஐஒசி நிறுவனமும் எரிபொருளின் விலையை திருத்தியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், டீசல் விலையைக் குறைப்பதற்கான இயலுமை இருந்தும். பெற்றோலின் விலையை மாத்திரம் குறைப்பது நியாயமானதல்ல என அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.