பேக்கரி பண்டங்களின் விலை மேலும் அதிகரிக்கும்!
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தன. இதனையடுத்து ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி பண்டங்களின் உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அதேசமயம் சில பேக்கரி உரிமையாளர்கள் மாலு பணிஸை 120 ரூபாவுக்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்வதால், பேக்கரித் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.