வீடுகளுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி விசாரணைக் குழு
நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவான நிலையில் அது குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணைக் குழு சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய மேலும் 35 சம்பவம் நேற்றைய தினம் பதிவானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேவேளை வவுனியா - வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (1) சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை வடக்கு - ஜாவத்தை, வெயங்கொடை - ஹீன்தெனிய, நுவரெலியா - பம்பரகலை உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
உள்நாட்டில் சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவைனால் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.