24 மணிநேர தடுப்பூசி மையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி
கொழும்பு விகாராமகாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இராணுவத்தினரால் இயக்கப்படும் 24 மணிநேர கொவிட்-19 தடுப்பூசி மையத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்றிரவு சென்று பார்வையிட்டார்.
இதன்போது கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் உடனிருந்தார்.
இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல பணிப்பகத்தின் வழிகாட்டலுக்கமைய தேசிய தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சிப்பாய்களால் கொழும்பு விகாரா மகா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் 24 மணிநேர தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் மற்றும் பத்தரமுல்லை “தியத உயன” இராணுவ தடுப்பூசி மையத்தில் ஓகஸ்ட் (02) ஆம் திகதி தொடக்கம் புதன் கிழமை வரையில் அஸ்ட்ரா செனகா (கொவிஷீல்ட்) தடுப்பூசிகளை 24 மணிநேரமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

