யாழிற்கு வருகை தரும் ஜனாதிபதி; நிகழ்வுகளில் நகர மேயர் மதிவதனிக்கு அழைப்பில்லை!
நாளை மறுதினம் (செப்டெம்பர் 1) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ் . பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி பங்கேற்கும் அந்த நிகழ்வுக்கு மாநகர மேயருக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி பங்கேற்கவுள்ள நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்திற்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு அலுவலகத் திறப்பு, மன்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதான அடிக்கல் நாட்டல் போன்றவற்றுடன் பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குகொள்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இதன்போது மாநகர சபையில் இருந்து ஆணையாளர் மற்றும் நூலகர் ஆகியோரை மட்டுமே மாவட்ட செயலாளர் எழுத்து மூலமாக அழைத்திருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜாவை அழைக்கவோ அல்லது ஜனாதிபதியின் வருகை தொடர்பில் அவருக்கு அறிவிக்கவோ இல்லை என கூறப்படுகின்றது.
மேயருக்கு அவமதிப்பு
அதோடு மாவட்ட செயலகம் புறக்கணித்தமை போன்று ஜனாதிபதி செயலகமும் இதுவரை மாநகர மேயருக்கு எந்தவொரு அழைப்போ அல்லது அறிவித்தலோ வழங்கவில்லை.
யாழ் . மாநகரின் முதல் பெண் மணியான முதல்வருக்கு யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகை தரும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்படாதமையனாது, அவரை அவமதிக்கும் செயற்பாடாகவே காணப்படுகிறது.
அதேவேளை கடந்த காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்வுகளில் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது