ஜனாதிபதிக்கான அறை இனி மக்களுக்கு ; அநுரவின் மற்றுமொரு அதிரடி
இதுவரைக் காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் விசேட பயன்பாட்டுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் விசேட அறை, இன்று (24) முதல் பொதுமக்களின் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

விசேட அறை
ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்கள் கொண்ட கொள்ளளவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தின்படி ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 1001 ஆம் இலக்கத்தைக் கொண்ட இந்த விசேட அறையும் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்தது.
வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 42 ஆண்டுகளில் இந்த அறை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் வருகையை எதிர்பார்த்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாமல் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது.
இன்று முதல் இந்த விசேட அறை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சாதாரண நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களையும் வளங்களையும் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.