முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினராவர்.
எலும்புக்கூடுகளாகத் தோண்டி எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெடிப்புக் காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக, ஆரம்பக்கட்ட பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
12 முதல் 53 வயது வயதுக்கு இடைப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக் காயம் காரணமாகவுள்ளது. அத்துடன், துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்தனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பிரதான வீதியோரத்தில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போது இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.