இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? வலுசக்தி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கை
நுரைச்சோலை "லக்விஜய" மின்நிலையத்தின் நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றது.
இவ்வாறு பரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அறிவித்துள்ளது.

எதிர்காலத் தேவை
நுரைச்சோலை மின்நிலையத்தின் எதிர்காலத் தேவைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளன.
அந்த நிலக்கரித் தொகுதிகள் தற்போது தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், மின்நிலையத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறுமின்றி வழமை போல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மீதமுள்ள நிலக்கரி விநியோகங்களையும் எவ்வித தடையுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்பதை வலுசக்தி அமைச்சு பொதுமக்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.