அரசியல் சூழ்ச்சிகள் ; விஜய்யின் உயிருக்கு ஆபத்து; டி.ஜி.பி-யிடம் முறைப்பாடு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், விஜய்யின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான டில்லிபாபு இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி-யிடம் நேரில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள்
அந்த மனுவில், தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளதாகவும், அவர் ஆட்சி அமைப்பதை தடுக்க பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, விஜய் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை விரும்பாத சில சக்திகள், அவருக்கு எதிராக பா.ஜ.க மூலம் நெருக்கடிகளை கொடுத்து வருவதாக டில்லிபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உடனடியாக உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விஜய்யுடன் கூட்டணி அமைத்து கைகோர்த்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிலவும் இக்கட்டான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தரப்பின் கோரிக்கையாக உள்ளது.
ஒரு புதிய அரசியல் சக்தி உருவெடுக்கும் போது, அவருக்கு எதிராக திட்டமிட்ட சதி வேலைகள் நடப்பதாக கிளம்பியுள்ள இந்தப் புகார், அரசியல் களத்தில் அனலை கூட்டியுள்ளது.