பிணை வழங்க கோழி இறைச்சி கேட்டவர் பணி நீக்கம்!
திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்காக, அவருக்கு பிணை வழங்க பொலிஸ் நிலையத்துக்கு வந்த நபரிடம் கோழி இறைச்சி ஒரு கிலோ கேட்டதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் அமரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் குறித்த சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் ஒருவரை பொலிஸ் குழுவினர் கைது செய்து, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த நபரை மறுநாள் பொலிஸ் பிணையில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அவருக்கு பிணை வழங்குவதற்காக ஒருவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது குறித்த பொலிஸ் சார்ஜன்ட், அந்த நபரிடம் கோழி இறைச்சி ஒரு கிலோ கோரியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் சார்ஜன்டை அடையாளம் கண்ட அதிகாரிகள், அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.