இளம் தம்பதியினரின் பல கோடி ரூபாய் வீட்டை பறிமுதல் செய்த பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்
உடனடி பணப் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்களை முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் கைது
நேற்று புதன்கிழமை (20) அத்துருகிரிய பகுதியில் வைத்து இந்த தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பொரளை, பேஸ்லைன் வீதியிலுள்ள 'சிறிசர உயன' பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய மனைவி மற்றும் 37 வயதுடைய கணவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ள நிலையில், போதைப்பொருள் மூலம் ஈட்டிய பணத்தை, சந்தேக நபரான பெண்ணின் தாயாரின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அத்துருகிரிய, கொரதொட்ட பகுதியில் அமைந்துள்ள 06 பேர்ச் காணி மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள வீட்டை 2023 டிசம்பர் மாதத்தில் சுமார் 3 கோடி ரூபா கொடுத்து இப்பெண் வாங்கியுள்ளார்.
இதற்கமைய, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புதன்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு அந்த வீடு மற்றும் காணியை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை நடத்திவருவதோடு, கணவன், மனைவி மற்றும் தாயாரின் பெயரிலுள்ள 06 வங்கி கணக்குகளும் கணவனின் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொகுசு கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் ஈடுபட்டுவருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.