சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டி ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வண்டி ஒன்றுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரகசியமாக கிடைத்த உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபருடன் சேர்த்து சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்று சனிக்கிழமை (14) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.