முச்சக்கர வண்டி துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகடே சந்திக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (31) மாலை பொலிஸ் சோதனைச் சாவடியில், கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் சோதனைச் சாவடியில் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியால் வந்த முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு
எனினும், முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்து, வாகனத்தை அதிகாரிகள் இருந்த திசையை நோக்கித் திருப்பி அதிவேகமாக இயக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சோதனைச் சாவடியில் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் முச்சக்கர வண்டியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியிலும் அந்த வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் பயணித்த கோனஹேன பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேயங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்மோட்டைச் சேர்ந்த 17 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி, பின்னர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கோனஹேன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பொலிஸார், மேற்கு மாகாண வடக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ள பொலிஸார், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொலிஸாரின் முயற்சிகளுக்குப் பொதுமக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
"நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் குடிமகனாக இருக்க வேண்டும். குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியமானது."