பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்: பாம்பன் அருகே தீவிர சோதனை நடவடிக்கை
ராமேஸ்வரம் அருகே கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் (03-05-2023) காலை சென்னையில் இருந்து மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் வெடிகுண்டு தடுப்பு மற்றும் சோதனை சிறப்பு பிரிவினர், உளவுத்துறையினர் மாவட்ட பொலிஸ் சிறப்பு படை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர்கள் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், அக்காள் மடம், தண்ணீர் ஊற்று உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மற்றும் மணல் பாங்கான இடங்கள் பனங்காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை சுமார் 10 மணிளவில் குறித்த சோதனை ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை வெடிகுண்டு அல்லது அதன் சார்ந்த எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஜூன் இறுதி வாரத்தில் தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரை ஓரத்தில் உள்ள தென்னந்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு புதையல்கள் (32 சாக்கு மூட்டைகள்) கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவைகள் பொலிஸரால் அழிக்கப்பட்டது.
விசாரனையில் விடுதலைப் புலிகள் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், பிரப்பன் வலசை உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் தமிழ் நாட்டிலிருந்து அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்த அரசாங்கம் ஆணையிட்டது.
இதனையடுத்து அவர்கள் அவசர கதியில் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதா? என்பது தொடர்பில், தகவல் உண்மையானதா என்பது குறித்து சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பன் ஒட்டி உள்ள கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் திடீரென பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது மீனவ கிராமங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.