யாழ் மாவட்ட மக்களை புகழ்ந்து தள்ளும் பொலிஸார்!
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்களோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எவ்விதமான வன்முறைகளிலோ, எதிர்ப்பு நடவடிக்கையிலோ ஈடுபடாமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமம் என யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் என்.பி லியனகே தெரிவித்தார்.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில், பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் முன்னெடுத்து வருகின்றார்கள்.
யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். இந்நிலையில் , பொலிஸ் திணைக்களம் என்ற ரீதியில் யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்கவும். பரீட்சை காலங்களில் நிபந்தனைகளுடன் மாத்திரமே ஒலிபெருக்கி அனுமதியை பொலிஸார் வழங்குகின்றோம்.
கோவில் திருவிழாக்களின் போது, ஒலிபெருக்கி சத்தத்தை மிகவும் குறைத்துப் போடுவதன் மூலம் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுத்துதைத் தவிர்க்கலாம். அதேசமயம் யாழ். மாவட்டத்தில் குற்றச்செயல்கள் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை உரிய தரப்பினருடன் உதவியுடன் பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள். சிலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைதுசெய்ய மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கப்பெற்றால் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.