துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
கேகாலை யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC), தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தொலைத்தது அல்லது தவறவிட்டது தொடர்பான விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 26 அன்று பணி நிமித்தம் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களைத் திருப்பி ஒப்படைக்கத் தவறியதையடுத்து, சீதாவக்கபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த அதிகாரி ஜூன் 27 அன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நேற்று ருவான்வெல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜூன் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை, சீதாவக்கபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும், சீதாவக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புச் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.