போதையில் தூங்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்
இலங்கை பொலிஸார் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் போதையில் தூங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொலிஸார் சிலர் பணியின் போது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் வெளியான காணொளி குறித்து காவல்துறை விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
பாணந்துறை வடக்கு காவல்துறை நிலைய உத்தியோகத்தர்கள் சிலரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதில் காவல்துறை மா அதிபர் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்திட்யசகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த உத்தியோகத்தர்கள் மதுபோதையிலா? இருந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாகவே, குறித்த காணொளியில் தோன்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.