நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி
களுத்துறை, அகலவத்தை, கெக்குலந்தல பிரதேசத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவரை பொலிஸ் முச்சக்கரவண்டியில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிளும் 52 வயதுடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.