விசாரணைக்கு சென்ற இடத்தில் மாயமான பொலிஸ் ஜீப் வண்டி
119 காவல் அவசர அழைப்புப் பிரிவில் பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு ஜீப் வண்டி நேற்று இரவு திருடப்பட்டது.
119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க நான்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜீப் வண்டி திருட்டு
இந்த அதிகாரிகள் இரவு நடமாடும் பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜீப்பின் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றதாகவும், அந்த நேரத்தில் இந்த திருட்டு நடந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், திருடப்பட்ட பொலிஸ் ஜீப் வண்டி, ஒரு பக்க சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டபோது, அதன் இயந்திரம் நிறுத்தப்பட்டு, சாவிகள் சாவித்துவாரத்தில் இருந்ததாக, மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குறித்த திருடப்பட்ட ஜீப் வண்டி இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். ஜீப் வண்டியை யார் திருடிச் சென்றார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இயந்திரம் இயங்கும் நிலையில் பிரதான சாலையில் ஜீப்பை கைவிட்ட ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.