லசந்த விக்ரமசேகர பாதுகாப்பு கோரிய கடிதம் குறித்து காவல்துறை விளக்கம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தமக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக ஊடகங்களில் பரவியுள்ள தகவலுக்கு விளக்கம் வழங்கும் வகையில் காவல்துறை தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதியிடப்பட்ட விக்ரமசேகரவின் கடிதம், காவல்துறை மாஅதிபரிடமிருந்து தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான காவல்துறை மாஅதிபருக்கும் , பின்னர் மாத்தறை - ஹம்பாந்தோட்டை பிரதி காவல்துறை மாஅதிபர் மற்றும் மாத்தறை காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் அனுப்பப்பட்டது.

பின்னர் வெலிகம காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மிதிகம காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இன்று வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு ஏதேனும் பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
இதேவேளை, வெலிகமப் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, 2025 ஒக்டோபர் 22ஆம் திகதி தனது அலுவலக அறையில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவரின் மரணத்திற்குப் பின்னர், அவர் அனுப்பியிருந்த பாதுகாப்பு கோரிக்கை கடிதம் தற்போது முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அதுகுறித்து மேற்கூறிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.